யானையால் பரபரப்பு
கடம்பூர் அருகே இரவில் வாகனத்தை வழிமறித்து நின்ற ஒற்றை யானையால் பரபரப்பு;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்தில் உள்ள 10 வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. சமீப காலமாக அடர்ந்த வனப்பகுதி விட்டு வெளியேறும் யானைகள் கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. இதே போல் கரும்பு ஏற்றி வரும் வாகனங்களுக்காக காத்திருந்து அந்த வாகனங்களை வழிமறிக்கும் சம்பவமும் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு மாவட்டம் கடம்பூர் வனப்பகுதி ஒட்டியுள்ள மக்கம்பாளையம் செல்லும் சாலையில் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று சாலை நடுவே நின்று கொண்டு வாகனத்தை வழி மறித்து நின்றது. சாலை நடுவே ஒற்றை யானை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வாகன ஓட்டி சற்று தொலைவில் வாகனத்தை நிறுத்திக்கொண்டார். 15 நிமிடமாக சாலை நடுவே நின்றுகொண்டிருந்த அந்த ஒற்றை யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. கடம்பூர் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே இந்த ஒற்றை யானை இரவு நேரத்தில் சாலையோரம் உலா வருவதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.