பரமத்தி வட்டாரத்தில்காரிப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
பரமத்தி வட்டாரத்தில்காரிப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்.;
பரமத்திவேலூர், ஆக.1: பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் சுதா தெரிவித்துள்ள செய்திகுறிப்பில்: பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் 2025-2026-ம் ஆண்டு காரிப் பருவத்தில் சோளம், நிலக்கடலை, மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் சாகுபடி பயிர்களை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.143.02 மற்றும் நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரு. 434.72 கடைசி தேதி ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மக்காச்சோள பயிருக்கு ஏக்கருக்கு ரூ.642.20 மற்றும் பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூபாய் 535.48 செப்டம்பர் மாதம் 16-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் இதர வங்கிகள் மற்றும் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் உறுதிமொழி கடிதம் அளித்து பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களில் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், கைபேசி எண், ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரிமியம் செலுத்தி விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் அல்லது பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையத்தினை அணுகி தெரிந்து கொள்ளலாம் என பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் சுதா தெரிவித்துள்ளார்.