கோவை: ஹவாலா பணம் கடத்தல் – இருவர் கைது !
கோவையில் இருந்து கேரளாவிற்கு ஹவாலா முறையில் கடத்தப்பட்ட 26.4 லட்சம் ரூபாய் பணம் க.க.சாவடி பகுதியில் இன்று காலை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.;
கோவையில் இருந்து கேரளாவிற்கு ஹவாலா முறையில் கடத்தப்பட்ட 26.4 லட்சம் ரூபாய் பணம் க.க.சாவடி பகுதியில் இன்று காலை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், மாகாளியம்மன் கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த மதுக்கரை ரோந்து பிரிவு போலீசாருக்கு, ஹவாலா பணம் கடத்தப்படுவதற்கான ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சந்தேகத்திற்கிடமான இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, ஆவணங்களின்றி ரூ.26.40 லட்சம் பணமும் கவரிங் வளையல்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பணத்தை எடுத்துச் சென்றவர்கள் கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம் மற்றும் அப்துல் ரகுமான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சரியான விளக்கம் வழங்காததால் போலீசார் இருவரையும் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.