கோவை: பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி !
பெரியநாயக்கன்பாளையத்திலிருந்து கோவை செல்லும் பாசஞ்சர் ரயிலில், பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
பெரியநாயக்கன்பாளையத்திலிருந்து கோவை செல்லும் பாசஞ்சர் ரயிலில், பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சமீப காலமாக ரயில்களில் பெண்கள் மீது நடைபெறும் திருட்டு மற்றும் பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் வகையில், ரயில்வே போலீசார் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், கோவை ரயில்வே இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையிலான குழு பங்கேற்றது. மேட்டுப்பாளையம் எஸ்.ஐ. மனோகரன், சாந்தி, மங்கையர்க்கரசி, வனக்குமார் மற்றும் சமூக ஆர்வலர் பமீலா உள்ளிட்டோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புதிய நபர்களிடமிருந்து உணவுப்பொருட்களை ஏற்க வேண்டாம், உடைமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், பெண்கள் பெட்டியில் ஆண்கள் நுழைந்தால் உடனடியாக புகார் செய்ய வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.