கொட்டரை நீர்த்தேக்கம் மூலம் சேமிக்கப்படும் நீர் முழுமையாக விவசாய பாசன பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தகவல்.
மருதையாற்றின் குறுக்கே ரூ.92.70 கோடி மதிப்பில் சுமார் 815 ஏக்கர் பரப்பளவில் 212.475 மில்லியன் க.அடி நீர் தேக்கும் வகையில் கொட்டரை நீர்த்தேக்கமானது கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த அணையின் நீளம் 2,360 மீட்டர் ஆகும். இரண்டு பாசன மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது. 9.91 கி.மீ. நீளம் உள்ள இடதுபுற கால்வாய்;
பெரம்பலூர் மாவட்டம் கொட்டரை நீர்த்தேக்கம் மூலம் சேமிக்கப்படும் நீர் முழுமையாக விவசாய பாசன பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தகவல். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொட்டரை ஊராட்சியில் நீர்வளத்துறையின் சார்பில், மருதையாற்றின் குறுக்கே ரூ.92.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கொட்டரை நீர்த்தேக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொட்டரை ஊராட்சியில் மருதையாற்றின் குறுக்கே ரூ.92.70 கோடி மதிப்பில் சுமார் 815 ஏக்கர் பரப்பளவில் 212.475 மில்லியன் க.அடி நீர் தேக்கும் வகையில் கொட்டரை நீர்த்தேக்கமானது கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த அணையின் நீளம் 2,360 மீட்டர் ஆகும். இரண்டு பாசன மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது. 9.91 கி.மீ. நீளம் உள்ள இடதுபுற கால்வாய் மூலம் 3,188 ஏக்கர் புன்செய் நிலங்களுக்கும், 6.73 கி.மீ. நீளம் உள்ள வலதுபுற கால்வாயால் 1,006 ஏக்கர் புன்செய் நிலங்களுக்கும் பாசன வசதி வழங்குவதால் 4830.38 டன் உணவு உற்பத்தி ஏற்படும். இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் இடதுபுற கால்வாய் வழியாக கொட்டரை, ஆதனூர், கூத்தூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், தொண்டபாடி, அழகிரிபாளையம் மற்றும் அரியலூர் ஆகிய ஊர்களும் வலதுபுற கால்வாய் மூலம் கொட்டரை, ஆதனுர், கூடலூர் மற்றும் சாத்தனூர் ஆகிய ஊர்களும் பயனடையும்.இந்த நீர்த்தேக்கமானது, கொட்டரை, ஆதனூர், சாத்தனூர், கூடலூர், புஜங்கராயநல்லூர், கூத்தூர், அழகிரிபாளையம், தொண்டப்பாடி, பிலிமிசை ஆகிய 9 கிராமங்கள் பயனடையும் வகையிலும், சுமார் 4,194 ஏக்கர் பரப்பளவில் விவசாய பாசனம் பெறும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது. இந்த கொட்டரை நீர்த்தேக்கத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் நீர்த்தேக்கத்திற்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு வரும் நிலம் மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையிலான சாலை மற்றும் நீர் வெளியேறும் பாசன வாய்க்கால் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி தேவை விவரம், பணி தொடங்குவது குறித்து நீர்வளத்துறை செயற்பொறியாளர் அவர்களிடம் விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும், நீர்த்தேக்க நீர் அனைத்தும் முழுமையாக விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், நில எடுப்பு பணிகளை விரைவாக முடித்து, கட்டுமான பணிக்கான திருத்திய நிர்வாக அனுமதியை விரைவில் மேற்கொண்டு, கொட்டரை நீர்த்தேக்க திட்டத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் நீர்வளத்துறை செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, நீர்வளத்துறை செயற்பொறியாளர் மு.பாண்டியன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஆர்.சீனிவாசன், உதவி பொறியாளர்கள் தினகரன்(குன்னம் பாசன பிரிவு) பார்த்திபன் (பெரம்பலூர் பாசன பிரிவு), ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், பிரேமலதா, ஆலத்தூர் வட்டாட்சியர் முத்துக்குமரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.