பரமத்திவேலூரில் சிறுமியை கடத்திய சிறுவன் போக்சோ வழக்கில் கைது.
பரமத்திவேலூரில் சிறுமியை கடத்திய சிறுவன் போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.;
பரமத்திவேலூர், ஆக.7: ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி, கடந்த 3-ந் தேதி மாயமானார். இதனால் போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து. விசாரித்தபோது கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தி சென்றது தெரியவந்தது. கூலி வேலை பார்த்து வரும் சிறுவன், சிவகிரியில் வேலை பார்த்தபோது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டதாக தெரியவந்தது. இந்நிலையி்ல் சிறுவர் சிறுமி 2 பேரும் இரு சக்கர வாகனத்தில் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் நோக்கி சென்ற போது, பரமத்தி போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது முன்னுக்குபின் முரணாக பேசியதால் பரமத்தி மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் சிறுவர்,சிறுமி 2 பேரும் காதலிப்பதாகவும், வீட்டை விட்டு வெளியேறி வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். சிறுமியை கடத்திய வழக்கில் பரமத்திவேலூர் மகளிர் போலீசார் சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் நாமக்கல் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவனை அடைத்தனர்.