பேராவூரணியில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு வரவேற்பு... பாம்பன் எக்ஸ்பிரஸ் நின்று செல்ல வர்த்தகர் சங்கம் மனு
கோரிக்கை மனு;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ரயில் நிலையத்திற்கு ஆய்வு செய்ய வருகை தந்த திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் பால்ராம் நேகிக்கு புதன்கிழமையன்று பல்வேறு அமைப்பினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பேராவூரணி வர்த்தகர் சங்கம் சார்பில் கோட்ட மேலாளரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது, "தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வளர்ந்து வரும் நகரமாகும். இப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சென்னையில் தொழில் மற்றும் வேலை தொடர்பாக வசித்து வருகின்றனர். சுமார் 15 க்கும் மேற்ப்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகள் தினசரி சென்னைக்கு சென்று வருகிறது. இந்நிலையில் பேராவூரணி வழியாக சென்னை செல்லும் ரயில்கள் எதுவும் இங்கு நின்று செல்வதில்லை. தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமமடைகின்றனர். பல வருடங்களுக்கு முன்பாகவே பேராவூரணி வழியாக சென்ற கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னைக்கு அதிக அளவில் பேராவூரணியில் இருந்துதான் பயணிகள் சென்று வந்தனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை பேராவூரணி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைமேடையை நீட்டிக்க கூடிய அனைத்து வசதிகளும் ரயில் நிலையத்தில் உள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். கோட்ட மேலாளரை ரயில் பயனாளிகள் சங்கம், லயன்ஸ், ரோட்டரி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் வரவேற்று மனு அளித்தனர்.