காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை முகாம்

காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை முகாம் நடைபெற்றது.;

Update: 2025-08-08 15:22 GMT
அரியலூர் ஆக.9- ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்மைத்துறை மூலம் நடத்தப்பட்டு வரும் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை முகாம் காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது. முகாமில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கத்தின்கீழ் பயறுவகைத் தொகுப்பு இடுபொருட்களை (பயறு கிட்) வழங்கினார். முகாமில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா வட்டாட்சியர் சம்பத் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) மகேந்திரவர்மன் பேசுகையில் விதை நேர்த்தி செய்தலின் அவசியம், வேளாண் பயிர்கள் சாகுபடியில் உயிர் உரங்கள் மற்றும் திரவ உயிர் உரங்களின் பயன்பாடு, நுண்சத்து இடுவதால் ஏற்படும் நன்மைகள், கோடை உழவு மானியம், குறுவை சாகுபடியில் இயந்திர நடவிற்கு வழங்கப்படும் மானிய விபரங்கள், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் மக்காச்சோளம் திட்டத்திற்கான மானிய விபரங்கள், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் பசுந்தாள் உர விதைக்கான மானிய விபரங்கள், அனைத்து விவசாயிகள் மற்றும் பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி பெறும் விவசாயிகள் அனைவரும் விவசாயி அடையாள எண் பெறுவதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்து விளக்கினார். உதவி வேளாண் அலுவலர் ராம்குமார் கிடங்கு இடுபொருட்கள் மற்றும் மானிய விபரங்கள் குறித்து விளக்கினார். வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் மீனாட்சி அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்தும் மண் ஆய்வு செய்து உரமிட்டு மண்வளம் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விளக்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் மகேஷ்குமார் உழவன் செயலி பதிவிறக்கம் செய்து இடுபொருட்கள் முன்பதிவு செய்யும் முறை குறித்து விளக்கினார். முகாமில் காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், பண்ணை மகளிர் கலந்து கொண்டனர்.

Similar News