மகளிர் சுய உதவி குழு விற்பனை கண்காட்சி ஆட்சியர் பார்வை
ஸ்ரீமூலக்கரை ஊராட்சிக்கு ரூ.90 இலட்சத்துக்கு மேல் பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.;
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீமூலக்கரை ஊராட்சியில் 79வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பேசியதாவது: 79வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு நடைபெறுகின்ற கிராம சபை கூட்டத்திற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறுகின்ற வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் குறித்து பார்க்கின்ற பொழுது, இங்கு பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரியவருகிறது. குறிப்பாக இந்த ஊராட்சியில் 8 குக்கிராமங்களும், 9 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குடிநீர் திட்டப்பணிகள், பொது கட்டடம், தனிநபர்களுக்கான வீடுகள் என பல்வேறு திட்டப்பணிகள் இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கிடைத்திருக்கிறது. குறிப்பாக 1402 வீடுகளில் 1344 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சரின் மறுகட்டுமானத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பல்வேறு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. 6 அங்கன்வாடி மையங்கள் கட்டிமுடிக்கப்பட்டு, சிறந்த எண்ணிக்கையில் அங்கு குழந்தைகள் பயின்று வருகின்றனர். மேலும், இப்பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நிறைய மாணவர்கள் பயின்று வருகின்றனர். குறிப்பாக, சுரங்கம் மற்றும் கனிமம் உள்ள ஊராட்சியாக இருப்பதால், அதன் வாயிலாக கிடைக்கின்ற வருவாய் மூலம் புதியதாக பல்வேறு பணிகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 16 பணிகள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பணிகளும் தொடங்கப்படும். அடைக்கலபுரத்தில் கல்வெட்டு கட்டுதல், ஸ்ரீ மூலக்கரை பகுதியில் உள்ள சாலையை ரூ.8 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்தல், கால்நடைபராமரிப்பு மருத்துவமனை சாலையை ரூ. 7 இலட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்தல், பேட்மாநகரத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட ரூ. 24 இலட்சம் மதிப்பிட்டில் மேல்நிலைநீர்த் தேக்கத் தொட்டி கட்டுதல், ரூ.8 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்கத் தொட்டி அமைத்தல், 4 இடங்களில் கைபம்புகள் அமைத்தல், முத்துசாமிபுரம் பகுதியில் ரூ.1 இலட்சத்து 98 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் மறுசீரமைப்பு செய்தல், பேட்மாநகரம் பறம்பு பகுதியில் ரூ.1 இலட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் பம்பு அறை அமைத்தல், அணியாபுரம் பகுதியில் ரூ.2 இலட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் மறுசீரமைப்பு செய்தல், ஸ்ரீமூலக்கரை பறம்பு பகுதியில் ஒரு பம்பு அறை மற்றும் கை பம்பு அமைத்தல் என இந்த ஒரு ஊராட்சிக்கு மட்டுமே மொத்தம் ரூ. 76 இலட்சத்து 26 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியைச் சார்ந்த மக்கள் பல்வேறு நல்ல விஷயங்களை செய்கின்ற பொழுதுதான் இதுபோன்ற நிதியை பயன்படுத்த முடியும். இந்த நிதி ஒதுக்கீடு மட்டுமல்லாது ஊராட்சி ஒன்றிய பொதுநிதியிலிருந்தும் பல்வேறு பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஸ்ரீமூலக்கரை ஊராட்சியில் ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் அமைத்தல் என ஒட்டுமொத்தமாக இந்த ஊராட்சிக்கு ரூ.90 இலட்சத்துக்கு மேல் பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்டிடம், அலுவலகம், அங்கன்வாடி, பள்ளிக்கூடம், சாலை, குடிநீர் உள்ளிட்ட எல்லாவித உட்கட்டமைப்பு வசதிகள் நிறைவடைந்த பகுதியாக இந்த ஊராட்சி மாறிவிடும். இதை பயன்படுத்தி கல்வி, குழந்தைகளின் உடல்நலம், ஆரோக்கியம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் நாம் எந்த வகையில் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்கிறோம் என்பதில் தான் உண்மையான வளர்ச்சி உள்ளது. இந்த வாய்ப்புகளை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு வளர்ச்சியை அடைவதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த ஒருங்கிணைப்புடன், நமது ஊராட்சியில் உள்ள பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் எவ்வாறு படிக்கின்றனர், அந்த கல்வியை எவ்வாறு மேம்படுத்துவது, அதற்காக நாம் என்ன உதவிகள் செய்ய முடியும் என்பதில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாண்மைக்குழு ஆகிய சங்கங்கள் மூலம் தொடக்கப்பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கான தேவைகள் உள்ளிட்டவை குறித்து தொடர்ந்து கண்காணித்து, அடுத்து நிலைக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு நல்ல கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்லூரி படிப்பு பயில முழு ஒத்துழைப்பை பொதுமக்கள் வழங்க வேண்டும். நமது மாவட்டத்தில் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பயிலுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக இந்த ஊராட்சியில் பள்ளி இடைநிற்றல், கல்லூரி செல்ல முடியாத நிலை என்பது இருக்க கூடாது. பெண் குழந்தைகள் கல்லூரி படிப்பு முடிக்காமல் இருக்க கூடாது. அனைத்து பெண் குழந்தைகளும் படிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சுதந்திர தின விழவில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதில் சுமார் 70 சதவீதம் பாராட்டுச் சான்றிதழ் பெற்றவர்கள் பெண்கள் தான். ஆகையால் ஏராளமான பெண்கள் அரசு பணியில் பணி செய்கின்றனர். அதேப்போல் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் தான் அதிகளவில் சிறப்பாக பங்கேற்றனர். பெண் குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. அவர்களை நன்றாக படிக்க வைக்கின்ற பொழுது நல்ல உயர் நிலையை அடைய முடியும். பெண்கள் கல்வி கற்பதில் யாருக்கும் பாகுபாடு இருக்க கூடாது. மேலும், பெண்கள் கல்வி கற்பதில் ஊர், மதம் உள்ளிட்ட எந்தவிதமான சமூக கட்டுப்பாட்டின் கீழ் தடைசெய்ய கூடாது. எனவே, அடுத்த தலைமுறையினரை பட்டதாரியாக மாற்றுவதற்கு அனைவரையும் படிக்க வைக்க வேண்டும். இந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்து, அதற்கான அனைத்து பணிகளையும் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து, மகளிர் திட்டம் சார்பாக 05 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி கடனுதவிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பார்வையிட்டார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா. ஐஸ்வர்யா, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு, உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு நாகராஜன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, திருவைகுண்டம் வட்டாட்சியர் ரத்தன சங்கர், திருவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சின்னதுரை, கிறிஸ்டோபர் தாசன், பொதுமக்கள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.