பேராவூரணியில், இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், ஜெனிவா ஒப்பந்த நாள் விழா
ஜெனிவா ஒப்பந்த நாள்;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில், இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில், ஜெனிவா ஒப்பந்த நாள் விழா நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் வ.மதியழகன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, இளையோர் செஞ்சிலுவை சங்கக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து, விழாவை தொடங்கி வைத்து உரையாற்றினார். இளையோர் செஞ்சிலுவைச் சங்க ஒன்றிய அமைப்பாளர் எல்.வீரப்பா, வட்டாரக் கல்வி அலுவலர் கே.கலாராணி, பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் இரா.ராஜா, வட்டார வள மையம் மேற்பார்வையாளர் கே.கோகுலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட அமைப்பாளருமான அ.பிச்சைமணி, ஜெனிவா ஒப்பந்த நாள் விளக்க உரையாற்றினார். முன்னதாக, ஒன்றிய இணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.குமரன் வரவேற்றார். நிறைவாக, மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் ப.சேகர் நன்றி கூறினார். இதில், 24 பள்ளிகளைச் சேர்ந்த 248 மாணவ, மாணவிகள் 30 ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கட்டுரை, பேச்சு, பாட்டு, நடனம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், 'போர்க்காலங்களில் காயமடைந்தவர்கள், போர் வீரர்கள் மற்றும் பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதைக் குறிக்கும் 'ஜெனிவா ஒப்பந்த நாள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.