தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வெடிக்கும்: உழைப்போர் உரிமை இயக்கம் எச்சரிக்கை

தமிழ்நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் வெடிக்கும் என உழைப்போர் உரிமை இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.;

Update: 2025-08-18 18:28 GMT
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி வளாகம் முன்பாக 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்கள், ஆகஸ்ட் 13-ம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டு, மறுநாள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் உழைப்போர் உரிமை இயக்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய உழைப்போர் உரிமை இயக்க ஆலோசகரான வழக்கறிஞர் குமாரசாமி, “பணி நிரந்தரம் செய்யக் கோரி 13 நாட்களாக அமைதி வழியில் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை, பொதுநல வழக்கு என்ற பெயரில் கைது செய்து காவல்துறை நாடகம் நடத்தியது. இந்த பொதுநல வழக்கை தொடர்ந்த தேன்மொழி, காவல்துறையினரின் படங்களை ஆவணமாக சமர்ப்பித்துள்ளார். இந்த வழக்கு காவல் துறையின் தூண்டுதலில்பேரில் தான் தொடரப்பட்டது. வேறு நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தாத காவல்துறை, இதை மட்டும் உடனடியாக செயல்படுத்தியுள்ளது” என்று குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர், “காவல் துறையின் அடக்குமுறை நடவடிக்கைகளை கண்டித்த உயர்நீதிமன்றம், கைது செய்தவர்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், போராட்டம் நடத்த தூய்மைப் பணியாளர்களுக்கு இடம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. எங்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை. காவல்துறையிடம் போராட்டம் நடத்த அனுமதி கோரி கடிதம் வழங்கியுள்ளோம். அனுமதி வழங்கவில்லை எனில் அனுமதி கோரி போராட வேண்டிய நிலை ஏற்படும். காவல் துறை தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுமா? அல்லது எங்களுக்கு சாதகமாக நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தமிழ்நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது மேலும் வலுவடையும். திருமாவளவன் பணி நிரந்தரம் தொடர்பான கருத்துக்களை எதன் அடிப்படையில் தெரிவித்தார் என தெரியவில்லை. தவறான நோக்கத்தில் கூறியிருக்க மாட்டார். அதே போல, அவரின் ஆதரவும் எங்களுக்கு தேவை. குப்பைகளை மனிதர்கள் சுத்தம் செய்யக் கூடாது. இயந்திர மனிதர்கள், ரோபோக்கள் மூலம் தான் அகற்ற வேண்டும் என்ற சூழல் வந்தால் அதை வரவேற்கிறோம். ஆனால், குப்பைகளை மனிதர்கள் அகற்றும் வரை அவர்களுக்கு பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும்” என்றும் வழக்கறிஞர் குமாரசாமி வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, சமூக பொருளாதார காரணங்களை எல்லாம் நன்கு ஆராய்ந்த பிறகு, 12 ஆயிரம் தற்காலிக பணியாளர்களை மாநகராட்சி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். அதை தான் இப்போது நிறைவேற்ற வேண்டுமென்று நாங்கள் கேட்கிறோம். ஆனால், முதலமைச்சரை நாங்கள் ஏக வசனத்தில் பேசியதாகவும், அவர் மீது அவதூறு பரப்பதாகவும் கூறுகின்றனர். அது போன்று நாங்கள் எதுவும் செய்யவில்லை, என்றும் கூறினார்.

Similar News