ஆற்றில் தவறி விழுந்து மாணவன் பலி

பலி;

Update: 2025-08-19 11:00 GMT
தஞ்சாவூர் அருகே சிவாஜிநகர் பகுதியில் ஓடும் புதுஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தபடி இருந்த 11ம் வகுப்பு மாணவர் கால் வழுக்கி விழுந்து ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு பலியானார். தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சிவசூர்யா (15). சுரேஷ் இறந்து விட்டார். இதனால் சிவசூர்யாவை அவரது சித்தப்பா வளர்த்து வந்தார். சிவசூர்யா மேம்பாலம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் மாலையில் தனது நண்பர் ஒருவருடன் சிவாஜி நகர் பகுதியில் ஓடும் புது ஆறு பகுதிக்கு சிவசூர்யா சென்றுள்ளார். அங்கு கரையில் அமர்ந்து இருந்த சிவசூர்யா திடீரென்று கால் வழுக்கி ஆற்றில் விழுந்தார், ஆற்றில் தண்ணீரின் வேகத்தில் சிவசூர்யா அடித்துச் செல்லப்பட்டார். இதனை எதிர் கரையில் படித்துறையில் குளித்து கொண்டு இருந்தவர்கள் பார்த்து சிவசூர்யாவை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தஞ்சாவூர் தீயணைப்பு வீரர்கள் 6 பேர் ஆற்றில் குதித்து சிவசூர்யாவை தேடினர். இரவு நேரம் ஆனதால் வெளிச்சம் இல்லாத நிலையில் தேடும் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை மீண்டும் தேடும்பணி நடந்தது. இந்நிலையில் புதுப்பட்டினம் அருகே வடசேரி வாய்க்கால் பகுதியில் சிறுவன் உடல் ஒன்று மிதப்பதாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. உடன் சம்பவ இடத்திற்கு தஞ்சாவூர் தீயணைப்பு வீரர்கள், தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று ஆற்றில் மிதந்த சிறுவன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து சிவசூர்யாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அந்த சிறுவன் சிவசூர்யாதான் என்று அடையாளம் காட்டினர். இதையடுத்து சிவசூர்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News