அதிமுக விவகாரம்: இபிஎஸ் மனு தள்ளுபடி உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரிய, இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.;

Update: 2025-08-19 13:35 GMT
2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யபட்டார். அவரின் தேர்வை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்து உள்ளிட்ட பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து, அதிமுக உறுப்பினர் எனக் கூறி, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி, உரிமையியல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பொதுச்செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் ஆனால் எடப்பாடி பழனிசாமி அவ்வாறு தேர்ந்தெடுக்கபடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, உரிமையில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இபிஎஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் வழக்கறிஞர் நர்மதா சம்பத் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ள சூரியமூர்த்தி, அதிமுக அடிப்படை உறுப்பினரே அல்ல எனவும், உறுப்பினராக இல்லாத சூரிய மூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது எனவும் தெரிவித்தார். எனவே, உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும், அங்கு நடைபெறும் வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்த நீதிபதி மனு குறித்து சூர்ய மூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் மூன்றாம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Similar News