கோவை மாவட்டத்தில் வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் !
உரிய ஆவணமின்றி கடத்திச் செல்லப்பட்ட வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.;
கோவை மாவட்டத்தில் SMART KHAKI'S திட்டத்தின் கீழ் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணமின்றி கடத்திச் செல்லப்பட்ட வெள்ளிக் கட்டிகள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்துள்ள SMART KHAKI'S திட்டத்தின் கீழ், கே.ஜி.சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாளையார் செக்போஸ்ட் அருகே காவல்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, கேரளாவைச் சேர்ந்த அஜயன் (45) மற்றும் முகமது வலியுதீன் ஆகிய இருவரும் பிடிக்கப்பட்டனர். விசாரணையில், அவர்கள் வைத்திருந்த பையில் உரிய ஆவணமின்றி தலா 100 கிராம் எடையுடைய 25 வெள்ளிக் கட்டிகள் மற்றும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கமும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் மாநில வரி நுண்ணறிவு பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டனர். பொது அமைதி மற்றும் சுகாதாரத்துக்கு பாதகமாக செயல்பட்டாலோ, சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். மேலும் குற்றச் செயல்கள் குறித்த தகவலை பொதுமக்கள் 94981-81212 என்ற தொலைபேசி எண் அல்லது 77081-00100 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.