முதியோர் பூங்கா அமைப்பதற்கு இடம் தேர்வு : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் முதியோர் பூங்கா அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.;

Update: 2025-08-21 09:50 GMT
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலையில், மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது "தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக நடந்து வருகிறது. இதில் கிழக்கு மண்டலத்தில் 14வது முகாம் நடைபெறுகிறது. கிழக்கு மண்டலத்தில் உள்ள முத்துநகர் பூங்காவில் நீச்சல் குளம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நமது பாராளுமன்ற உறுப்பினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தெப்பக்குளத்தை சுற்றி கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு பூங்காக்கள் உருவாக்கப்படும் அதற்கான பணிகள் விரைவில் நடைபெற உள்ளது. மேலும் முதியோர் பூங்கா அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. கிழக்கு மண்டலத்தில் உள்ள ரோடுகள் கழிவுநீர் கால்வாய்கள் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ், துணை ஆணையர் சரவணபெருமாள் மண்டல துணை ஆணையர் வெங்கட்ராமன், பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர்அகமது, சுகாதார அலுவலர் நெடுமாறன், மாநகராட்சி கவுன்சிலர்கள் ரெக்ஸ்லின், மும்தாஜ், எடின்டா, பேபி, ஏஞ்சலின், ராமு அம்மாள், மரிய கீதா, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரை மணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News