பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தபசு திருவிழா இன்று கொடியேற்றம்
பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தபசு கொடியேற்றம்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்மாள் சமேத பால் வண்ணநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆவணி தபசு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 14 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலையில் ஒப்பனையம்மாள் கோவில் முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் காலை 8.25 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவில் கோவில் துணை ஆணையர் கோமதி, ஊழியர் இசக்கித்துரை மற்றும் மண்டகப்படிதாரர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 11-ம் நாளான வருகிற 1-ந் தேதி மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான ஆவணி தபசு திருவிழா 13-ம் நாளான வருகிற 3-ந் தேதி மாலை நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.