பரமத்திவேலூர் அருகே சோகம் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.

பரமத்திவேலூர் அருகே சோகம் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி போலீசார் விசாரணை.;

Update: 2025-08-23 14:49 GMT
பரமத்திவேலூர், ஆக. 23: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வெற்றி கோனார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 50). இவரது மனைவி லட்சுமி (45). இவர்களது மகன் அரவிந்த் மாரியப்பன் (14). இவன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளான். இந்நிலையில் பெரியசாமி தனது குடும்பத்தினருடன் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மண்டபத்துபாறையில் உள்ள தேங்காய் குடோனில் தங்கி கடந்த 4 ஆண்டுகளாக கூலி வேலை செய்து வருகின்றார்.  இதில் அரவிந்த் மாரியப் பன் கடந்த சில மாதங்களாக குப்புச்சிபாளையம் சனப்பங்காடு காலனியில் உள்ள அவனது அக்காள் ரஞ்சிதா வீட்டில் வசித்து வந்துள்ளான் நேற்று முன்தினம் காலை அரவிந்த் மாரியப்பன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளான். ஆனால் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதற்கிடையே அதே பகுதியில் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயதோட்டத்திற்குள் அரவிந்த் மாரியப்பன் சென்றுள்ளான். அப்போது தோட்டத்திற்குள் மின்கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது. அதை கவனிக்காத அரவிந்த் மாரியப்பன் நடந்து செல்லும்போது மின்கம்பியை மிதித்ததால் சிறுவனை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு அங்குள்ள வரப்பு ஓரமாக இறந்த நிலை யில் சிறுவன் கிடந்துள்ளான். அதை யாரும் கவனிக்கவில்லை. இதற்கிடையே மின் கம்பி அறுந்து விழுந்த தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பியை சீர் செய்து மின் வினியோகம் செய்தனர். இந்தநிலையில் அன்று மாலை மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் வரப்பு ஓரத்தில் அரவிந்த் மாரியப்பன் இறந்து கிடப்பதை அந்த வழியாக சென்றவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவம்னைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News