தஞ்சாவூர் ஆற்றில் பைக்குடன் தவறி விழுந்த வாலிபர் சடலமாக மீட்பு
சடலம் மீட்பு;
தஞ்சாவூர் அருகே ஆலங்குடி நடுத்தெருவை சேர்ந்த கர்ணன் என்பவரின் மகன் அருண்குமார் (30). கூலி தொழிலாளி. இவர் கடந்த 29ஆம் தேதி நண்பர் இல்ல திருமணத்திற்கு சென்று விட்டு வல்லம் வழியாக ஊருக்கு தனது பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். ஆலக்குடி பகுதியில் ஓடும் கல்லணை கால்வாய் பாலம் பகுதிக்கு வந்தபோது நிலை தடுமாறி பைக்குடன் கல்லணைக் கால்வாயில் விழுந்துவிட்டார். இரவில் வெகுநேரமாகியும் அருண்குமார் வீட்டிற்கு திரும்பி வராதால் அவரது அண்ணன் அரவிந்த் பிரபு மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். அப்பொழுது கல்லணைக் கால்வாயில் பைக் தண்ணீரில் கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்துவிட்டு தகவல் தெரிவித்துள்ளனர். உடன் இது குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் கல்லணை கால்வாயில் அருண்குமாரை தேடிப் பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை நத்தமாடிப்பட்டி கல்லணை கால்வாய் பகுதியில் அருண்குமாரை தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டனர். இது குறித்து அருண்குமாரின் அண்ணன் அரவிந்த் பிரபு கொடுத்த புகாரின் பேரில் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.