தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு வார்த்தைகளால் சமூக வலைத்தளங்களில் பதிவு வெளியிட்ட பர்னிச்சர் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் தொழில் தொடங்குபவர்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில், தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலம் சந்தை சாலையில் வசிப்பவர் பழனிவேல். இவரது மகன் சிவகுமார் ( வயது 45) இவருக்கு இரண்டு மனைவிகளும் இரு குழந்தைகளும் உள்ளனர். தற்போது இவர் மதுக்கூர் விக்ரமம் சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மிகவும் தகாத வார்த்தைகளால் குரல் வழி பதிவு செய்து வாட்ஸ் அப் உள்ளிட்ட இணைய தளங்களில் சிவகுமார் வெளியிட்டார். அவரது இந்த அநாகரிமான பேச்சு அனைத்து தரப்பினரையும் முகம் சுழிக்க வைத்தது. மேலும், இது குறித்து திமுகவினர் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இந்த நிலையில், சிவகுமாரின் தகாத வார்த்தைகள் பதிவு குறித்து பேராவூரணி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கோ.இளங்கோ வாட்ஸ் அப் பதிவு ஆதாரங்களுடன் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர் அலாவுதீன் , சிவகுமார் மீது 296(பி),192, 352, 351(1), 352(2) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார். மேலும் சிவகுமாரை பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவுப்படி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.