கல்வியை காவிமயமாக்கும் பல்கலைக்கழக மானியக் குழு வரைவறிக்கையை திரும்பப் பெறக்கோரி மாணவர்கள் போராட்டம்
போராட்டம்;
அறிவியலுக்கு புறம்பான கருத்துகளையும், காவிமயத்தையும் அடிப்படையாக கொண்ட, ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவா கருத்தியலை கல்வியில் திணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் LOCF வரைவறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதேபோல, இந்திய மாணவர் சங்கம், தஞ்சாவூர் மாவட்டக்குழு சார்பில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டுள்ள LOCF வரைவறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் நகல் எரிப்பு போராட்டம், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் வசந்த் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர் ஹரிஷ் கண்டன உரையாற்றினார். மன்னர் சரபோஜி கல்லூரி கிளை நிர்வாகிகள் விக்கி, நித்யசூர்யா, மகாபாரதி, பகவதி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.