கரூர் உயிரிழப்பு விவகாரம்: தமிழக அரசிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய தேஜஸ்வி சூர்யா !
பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.;
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) குழுவினர், இன்று டெல்லி புறப்படுவதற்கு முன் கோவை பீளமேடு விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். குழுவில் இடம்பெற்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா, இந்த விவகாரம் தொடர்பாக பல தரப்பினருடனும் அதிகாரிகளுடனும் பேசியுள்ளோம். தமிழக அரசிடம் குழுவாக 5 முக்கிய கேள்விகளை முன்வைக்கிறோம்” என்றார். ஒன்று, இவ்வளவு மக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு சிறிய இடத்தை தேர்வு செய்தது யார்? பெரிய இடம் ஏன் வழங்கப்படவில்லை?.. நடிகர் விஜய் வந்தபோது மின்வெட்டு ஏற்பட்டதற்கான காரணம் என்ன? அடையாளம் தெரியாத பலர், நிகழ்ச்சியுடன் தொடர்பில்லாமல் கூட்டத்தில் நுழைந்தனர். இவர்களெல்லாம் யார்? இத்தனை பெரிய கூட்டம் நடைபெற உள்ளதை உளவுத்துறையோ காவல்துறையோ ஏன் கணிக்கவில்லை? போதுமான பாதுகாப்பு ஏன் வழங்கப்படவில்லை? அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு பதிலாக ஏன் 25 கி.மீ தூரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு காயமடைந்தவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்? மேலும், கூட்டத்தின் போது செருப்பு எறிந்தவர்கள் யார் என்பதற்கும் இன்னும் தெளிவு கிடைக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்ததாக சூர்யா கூறினார்.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அவர், “அவர்களுடன் என்றும் நாங்கள் இருப்போம்” என உறுதியளித்தார்.