கோவை மாவட்டம்: விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக அடமானம் வைக்கப்பட்ட ஏராளமான வாகனங்கள் பறிமுதல் !
கருமத்தம்பட்டி அருகே விவசாய தோட்டத்தில் இருந்து பல இருசக்கர வாகனங்கள், கார்கள் பறிமுதல்.;
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள மோளகாளிபாளையத்தில் உள்ள குழந்தைவேலுவின் விவசாய தோட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில், திடீர் சோதனை நடத்திய போலீசார், பல வாகனங்கள் பைனான்ஸ் நிறுவனங்களுக்கு தவணைத் தொகை செலுத்த முடியாததால் குழந்தைவேலுவிடம் அடமானம் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கடந்த பல ஆண்டுகளாக அவர் இவ்வாறு சட்டவிரோதமாக வாகனங்களை அடமானம் பெற்று பணம் கொடுத்து வந்ததும் விசாரணையில் வெளிச்சம் பார்த்தது. பைனான்ஸ் நிறுவனத்தினர் கூடுதல் ஆய்வு மேற்கொண்டபோது, பல வாகனங்கள் தவணைத் தொகை செலுத்தாதவைகளாகவும், சந்தேகத்துக்கிடமான முறையில் அடமானம் வைக்கப்பட்டவைகளாகவும் தெரியவந்தது. இதையடுத்து, ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. வாகன உரிமையாளர்கள், பைனான்ஸ் நிறுவனங்கள், மற்றும் குழந்தைவேலுவின் தொடர்புகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.