கோவை கொடிசியாவில் உலக புத்தொழில் மாநாடு: முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை !
தமிழ்நாடு 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி முன்னேறுகிறது — முதல்வர் ஸ்டாலின்.;
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற இரண்டு நாள் உலக புத்தொழில் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாட்டில் தொழில் மாநாடுகள் நடைபெறுவது மாநிலத்தின் முன்னேற்றத்துக்கும் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றுவதாக கூறினார். தமிழ்நாடு 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய அரசாங்கம் முயற்சி செய்து வருவதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆறு மடங்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதில் பெரும்பாலானவை பெண்கள் தலைமையில் செயல்படுவதாக குறிப்பிட்டார். தமிழ்நாடு நாட்டில் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவுத் துறையில் முன்னணியில் இருப்பதாகவும், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தருவதாகவும் கூறினார். மாநாட்டில் 40க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து முதல்வர் அவிநாசி சாலையில் 10 கி.மீ நீளமுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்து அதற்கு ஜி.டி. நாயுடு என பெயரிட்டார். மேலும் கோவையில் செம்மொழி பூங்கா, பெரியார் நூலகம், கிரிக்கெட் மைதானம் போன்ற பல வளர்ச்சி திட்டங்கள் விரைவில் அமலுக்கு வரும் எனவும் அறிவித்தார்.