கடைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை :
கடைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை : 507 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்!;
கோவில்பட்டி கடைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி 507 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பிரதான சாலை, அண்ணா பேருந்து நிலைய பகுதி, வேலாயுதபுரம், மாதாங்கோயில் தெரு, எட்டயபுரம் சாலை, கடலையூர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இயங்கும் கடைகளில் நெகிழிப் பைகள் விற்பனை செய்யப்படுகிறதா, பள்ளிகளுக்கு அருகே உள்ள பெட்டிக் கடைகளில் பீடி, சிகரெட், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர். மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் வித்யா விஸ்வநாதன், தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் அருண், வட்டார மருத்துவ அலுவலர் உமா செல்வி ஆகியோர் தலைமையில் மாவட்ட நலக் கல்வியாளர் முத்துசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் செல்லப்பாண்டி, சுகாதார ஆய்வாளர்கள் அய்யலுசாமி, சுப்பிரமணியன் ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். ஆய்வின்போது சில கடைகளில் நெகிழிப் பைகள் விற்பனைக்கும், பயன்பாட்டுக்கும் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பல்வேறு கடைகளில் இருந்து மொத்தம் 507 கிலோ நெகிழிப் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். பின்னர், நெகிழிப் பைகளை வைத்திருந்ததாக கடை உரிமையாளர்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மொத்தம் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர். பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளர்களும் அபராதம் விதிக்கப்பட்டது.