தாராபுரம் அருகே கார் தீப்பற்றி எரிந்தது – மூவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்..

தாராபுரம் அருகே கார் தீப்பற்றி எரிந்தது – மூவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.. சுங்கச்சாவடி அருகே காரில் திடீர் தீ – தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைத்தனர்;

Update: 2025-12-10 11:42 GMT
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காதப்புள்ளப்பட்டி சுங்கச்சாவடி அருகில் பயணித்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததில் மூவர் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தாராபுரம் – மூலனூர் – கம்பிளியம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த ஆனந்தன் (சின்னச்சாமி மகன்) தனது மகேந்திரா காரில் கோயம்புத்தூர் பீளமேட்டில் உள்ள அம்பாள் ஆட்டோ ஷோரூமுக்கு செல்லும் போது, அவருடன் ஆஷிக் காதர் (30), காளிதாஸ் (30) ஆகியோர் பயணித்தனர். காதப்புள்ளப்பட்டி பகுதியில் உள்ள சுங்கச்சாவடி கட்டிடத்தை நெருங்கும் போது, காரின் முன்பகுதியில் எலக்ட்ரிக் சர்க்யூட் பழுதாகி கரும்புகை கிளம்பியது. இதனை கவனித்த ஆனந்தன் உடனடியாக கையை நிறுத்தி மூவரும் காரில் இருந்து விரைந்து வெளியேறினர். அதன் சில நொடிகளில் கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. காரின் இயந்திரப்பகுதி முதல் கேபின் பகுதி வரை சில நிமிடங்களில் கருகியதால், கார் முழுமையாக சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக மூவரும் பெரிய விபத்திலிருந்து உயிர் தப்பினர். தகவல் கிடைத்ததும் தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான 5 வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். சம்பவம் குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News