தாராபுரத்தில் சுற்றித் திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அவதி

தாராபுரத்தில் சுற்றித் திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அவதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை;

Update: 2025-12-16 13:39 GMT
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளான கண்ணன் நகர், என்.சி.பி. நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகம், அண்ணாநகர், பஸ் நிலையம், போலீஸ் நிலையம் பகுதி, சர்ச் சாலை, காமராஜபுரம், பூளவாடி பிரிவு, நல்லம்மை நகர் மற்றும் கொழிஞ்சிவாடி உள்ளிட்ட இடங்களில் 3 குரங்குகள் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்த குரங்குகள் கடந்த 3 மாதமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருக்கும் பாத்திரங்கள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்துகின்றது. மேலும் சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடைகளில் உள்ள பழங்களை எடுத்துக்கொண்டு ஓடுகிறது. மேலும் சிறுவர், சிறுமிகளை துரத்துவதுடன், பலர் கையில் வைத்திருக்கும் உணவுபொருட்களை பறித்துச்செல்கின்றது. இந்த நிலையில் ஆங்காங்கே சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு பாதிக்கப்படும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே தாராபுரம் பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News