குளித்தலையில் சிபிஐஎம் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தால் பரபரப்பு

நூலகத்திற்கு சொந்தமான இடத்தை மீட்டு தர கோரிக்கை;

Update: 2026-01-23 15:01 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை முழு நேர கிளை நூலகம் கட்டிடம் அருகே 4 சென்ட் காலியிடம் உள்ளது. இந்த இடத்தில் குளித்தலை கூட்டுறவு கட்டிட கடன் சங்கம் நிறுவனம் சார்பில் தரைக்கடை வாடகைக்கு தனி நபருக்கு விட்டுள்ளனர். வாடகைக்கு எடுத்த நபர் தற்காலிக கொட்டகை அமைத்துள்ளார். ஆனால் வருவாய்த் துறையின் நகர நில அளவை வரைபடத்தில் நூலக கட்டிடம் 27 செண்டும் மீதியுள்ள 4 சென்ட் காலி இடமும் நூலகத்திற்கு சொந்தமானதாக பதிவில் உள்ளது. இதுகுறித்து சிபிஐஎம் கட்சியின் குளித்தலை ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன் நூலகத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாகவும், அதனை அகற்றி நூலக விரிவாக்க பணிக்கு ஒப்படைக்க வேண்டும் என குளித்தலை வருவாய் துறை நிர்வாகத்தை வலியுறுத்தி வந்துள்ளார். இது சம்பந்தமாக வருவாய்த் துறையினர் இரண்டு நாட்கள் முன்பு அப்பகுதியை ஆய்வு செய்து அளவீடு பணி செய்து சென்றுள்ளனர். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் காலியாக உள்ள 4 சென்ட் நிலம் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகத்திற்கு சொந்தமானது என அத்துறையின் அதிகாரிகள் 1961 ல் உள்ள அரசு பதிவுகளை காட்டி கூறியதால் வருவாய்த்துறை அதிகாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஆக்கிரமிப்பை அகற்றாததை கண்டித்து குளித்தலை காந்தி சிலையிலிருந்து கண்டன கோஷங்களை எழுப்பிக்கொண்டு குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஐஎம் கட்சியினர் வட்டாட்சியரை கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த வட்டாட்சியர் இந்துமதி விசாரணை செய்தபோது சி பி ஐ எம் நிர்வாகி முத்துச்செல்வன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பிறகு வந்த குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரன், முதற்கட்டமாக நூலகத்துறை கூட்டுறவுத்துறை அதிகாரிகளை வரவழைத்து ஆவணங்களை சரிபார்த்து யாருக்கு உரிமம் உள்ளதை தெரிவிக்க வேண்டும் எனவும் தற்போது அமைக்கப்பட்ட தரைக் கடையை அகற்ற கேட்டுக் கொண்டார். அதன் பிறகு வட்டாட்சியர் இந்துமதி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு போராட்டம் செய்த நபர்களிடம் நாளைக்குள் தரைக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் அதன் பின்னர் நூலகத் துறை மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகளுடன் ஆவணங்களை பெற்று யாருக்கு உரிமம் உள்ளது என தெரிவிக்கப்படும் என கூறியதை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Similar News