முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூஷனில் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் மாபெரும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் மற்றும் எம்.பி
தமிழக முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட "உலகம் உங்கள் கையில்" திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழாவானது இன்று இராசிபுரம் வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூஷனில் நடைபெற்றது.;
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் , 1001 மாணவ, மாணவியர்களுக்கு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் முன்னிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன் தலைமையில் இலவச மடிக்கணினிகளை வழங்கினார்கள்.சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை, சட்டம் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்காக மொத்தம் 10 லட்சம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன.இன்று இராசிபுரம், வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.மாவட்டத்தில் உள்ள 123 தனியார் கல்லூரிகளில் பயிலும் மொத்தம் 18,470 மாணவர்களுக்கு இந்த மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. இன்றைய விழாவில் மட்டும் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் நிறுவனத்தைச் சேர்ந்த 1,001 மாணவ-மாணவியருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.இத்திட்டத்தின் வழியே, தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உள்ளவர்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல உதவித்தொகை பெறுபவர்கள், 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்கள், ஆண்டு வருமானம் ரூ. 2,50,000-க்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் திரு. கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம். பி, வி.எஸ். மாதேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் மா. சரவணன், கல்லூரி தாளாளர் கே.பி. இராமசாமி, அறங்காவலர் இரா.முத்துவேல், செயலாளர் ச. மஞ்சு, கல்லூரியின் முதல்வர்கள் முனைவர். எஸ். பி விஜயகுமார், முனைவர் இரா.மணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.