தஞ்சாவூரில் மே 10-இல் கூட்டாட்சி கோட்பாடு கோரிக்கை மாநாடு 

கோரிக்கை மாநாடு ;

Update: 2025-03-10 02:36 GMT
அனைத்து இனங்களுக்கும் சம எண்ணிக்கை கொண்ட அவையாக இந்திய நாடாளுமன்றத்தை மாற்றியமைக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் மே 10-ஆம் தேதி கூட்டாட்சி கோட்பாடு கோரிக்கை மாநாடு நடத்துவது எனத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் இப்பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தெரிவித்தது: மக்கள்தொகை விகிதத்திற்கேற்ப இந்திய நாடாளுமன்ற மக்களவையை மறு சீரமைப்பு செய்வது என்ற இந்திய அரசின் திட்டம், இந்தி இன ஆதிக்கத்தை வலுப்படுத்தி, தமிழினத்தை வஞ்சிக்கும் சூழ்ச்சித் திட்டமாகும். இப்போதுள்ள 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில், தமிழினத்திற்கு புதுச்சேரியையும் சேர்த்து 40 உறுப்பினர்களே உள்ளனர். ஆனால், இந்தி மாநிலங்கள் 10-க்கும் சற்றொப்ப 225 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, இந்திக்காரர்களின் தயவோடுதான் எந்தவகை மாற்றங்களையும் நாடாளுமன்றத்தில் முன்னெடுக்க முடியும் என்ற நிலை உள்ளது. இருக்கிற மொத்த எண்ணிக்கையைப் புதிய மக்கள்தொகை விகிதப்படி பிரித்தால், தமிழ்நாட்டிற்கு 31 ஆகக் குறையவும் கூடும். எனவே இந்தியாவில் ஜனநாயக கூட்டாட்சி முறையைச் செயல்படுத்த வேண்டும். அதற்கேற்ப இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும். தமிழ்நாட்டு மக்களும், அரசியல் கட்சிகளும் ஒட்டுமொத்தமாகக் குரல் எழுப்ப வேண்டும். இக்கோரிக்கையை மக்கள்மயப்படுத்தும் வகையில், தஞ்சாவூரில் கூட்டாட்சி கோட்பாடு கோரிக்கை மாநாடு மே 10 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்தி ஏகாதிபத்திய மனநிலைக்கு எதிராக தமிழ் மக்கள், போர்க்குரல் எழுப்பிப் போராட வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை என்கிற இந்தி – சம்ஸ்கிருத மேலாதிக்கக் கொள்கையிலிருந்து, தமிழ்நாட்டுக்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கென தனித்த கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போதே மேக்கேதாட்டு அணைக்கான ஆய்வுப் பணிகளைக் கர்நாடகம் மேற்கொண்டது சட்ட விரோதமானது. எனவே, கர்நாடக அரசுக்கு எதிரான பொருளியல் தடையை அறிவித்து, தமிழர்களை ஒன்று திரட்டிப் போராட தமிழ்நாடு அரசும், கட்சிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த மத்திய அரசை தலையிடச் செய்ய தமிழ்நாடு அரசு உண்மையாகவே உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திருச்செந்தூர் முருகன், மருதமலை முருகன் கோயில்களில் குடமுழுக்குகளைச் செந்தமிழில் நடத்த வேண்டும் என்றார் மணியரசன். இக்கூட்டத்தில் பேரியக்கப் பொதுச் செயலர் கி. வெங்கட்ராமன், பொருளாளர் அ. ஆனந்தன், துணைத் தலைவர் க. முருகன், துணைப் பொதுச் செயலர் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் நா. வைகறை, பழ. இராசேந்திரன், ஓசூர் கோ. மாரிமுத்து, திருச்செந்தூர் மு. தமிழ்மணி, குடந்தை க. விடுதலைச்சுடர், பூதலூர் பி. தென்னவன், திருச்சி மூ.த.  கவித்துவன், புதுச்சேரி இரா. வேல்சாமி, மதுரை கதிர்நிலவன், சென்னை வெற்றித்தமிழன், பெண்ணாடம் மா. மணிமாறன், ஈரோடு வெ. இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News