விபத்துக்களை ஏற்படுத்தி வரும் 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட
திட்டச்சேரி - தேவங்குடி ஆற்றங்கரை இணைப்பு சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை;
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் தேவங்குடி, மத்திக்குடி, நாட்டார்மங்கலம், துறையூர், உத்தூர், எரவாஞ்சேரி, குத்தாலம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நாள்தோறும் திட்டச்சேரி சென்று வர, திட்டச்சேரி - தேவங்குடி இடையே உள்ள 10 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட ஆற்றங்கரை இணைப்பு சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மருத்துவமனை செல்லும் நோயாளிகள், வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளிகள் என நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த முக்கிய சாலையில், ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இரவு நேரங்களில் திட்டச்சேரி - தேவங்குடி இணைப்பு சாலையில் செல்பவர்கள், பள்ளம் இருப்பது தெரியாமல் கால் தடுமாறி, ஒருபுறம் உள்ள வயலிலும் , மறுபுறம் உள்ள வடக்கு புத்தாறு ஆற்றிலும் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்து நிற்பதால், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் கருவேல மரங்களின் மீது மோதி விபத்திற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து, எரவாஞ்சி ஊராட்சி மன்ற அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு, ஆபத்தான நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.