மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கிய டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் பணத்தை திருப்பிக்கேட்டு ரகளை செய்த ரவுடி கைது 

ரவுடி கைது;

Update: 2025-07-30 18:16 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில்,  மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 வாங்கிய, டாஸ்மாக் விற்பனையாளர்களிடம், பணத்தை திருப்பிக்கேட்டு ரகளை செய்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கொண்டிக்குளம் பகுதியில், கடை எண். 8165 டாஸ்மாக் உள்ளது. இங்கு, விற்பனையாளர்  முருகேசன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் மதுபானக் கடையில், கொண்டிக்குளம் பகுதியை சேர்ந்த மெய்கண்டன் மகன் வீரமணி (46), என்பவர், மது வாங்கியுள்ளார். அப்போது மது பாட்டிலுக்கான விலையுடன் கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வீரமணி, கூடுதலாக வாங்கிய பத்து ரூபாய் பணத்தை திரும்பி தரக் கோரி, விற்பனையாளர் முருகேசன் மற்றும் ராதாகிருஷ்ணனிடம் கேட்டு மிரட்டித் தகராறு செய்துள்ளார். மேலும், இரண்டு காலி பீர்பாட்டில்களை எடுத்து மதுபானக் கடையின் இரும்பு தடுப்பு மீது வீசி எறிந்துள்ளார். இது குறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் வினோதனுக்கு, ஊழியர்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வினோதன் விசாரணை நடத்தி விட்டு, பட்டுக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் வீரமணி மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் வீரமணியை தாலுகா காவல்துறையினர்  கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட வீரமணி சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஆறு வழக்குகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Similar News