பெண்ணிடம் 11 பவுன் தங்கச் செயின் பறிப்பு: போலீஸ் வலைவீச்சு!
ஸ்ரீவைகுண்டம் அருகே பெண்ணிடம் 11 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே பெண்ணிடம் 11 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மனைவி ராஜம்மாள் (46). இவர் நேற்று இரவு 9 மணி அளவில் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் பைக்கில் வந்த மர்ம ஆசாமி திடீரென ராஜம்மாள் அணிந்திருந்த 11 பவுன் தாலி தங்கச் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் பைக்கில் சென்று விட்டாராம். இந்த நகையின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ராஜம்மாள் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அந்தோணி ராஜ் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.