உடுமலை அருகே வனப்பகுதியில் முறையான அனுமதி இல்லாமல் சுற்றித்திரிந்த 12 பேருக்கு அபராதம்
வனத்துறையினர் எச்சரிக்கை
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.இதில் உடுமலை வனச்சரக பகுதியில் கள்ளச்சாராய பிரச்சனை தொடர்வதால் காட்டுப்பட்டி, மாவடப்பு,குழிப்பட்டி மற்றும் குருமலை குடியிருப்பு பகுதிகளில் தொடர் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணி வனத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சில தினங்களுக்கு முன் மாவடப்பு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வனப் பகுதியை சுற்றி பார்க்க வந்த சென்னையைச் சேர்ந்த மகேஷ்வரன்(37),விஜயகுமார் (36), வரதராஜ்(35),மாதேஷ்வரன் (37) திருமூர்த்திமலை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சுதாகர் (42),வோல்டர் (43),நாகமாணிக்கம் (28) ஆகியோர் வனத்துறை முன் அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைந்து சட்ட விரோதமாக தங்கி இருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து வனத்துறையினர் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ஏழு நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதே போன்று அதே பகுதிக்கு மாடுகளை வாங்கச் சென்ற உடுமலை தாலுகா ராவணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுச்சாமி(39), கார்த்திக்ராஜா(33),பிரகாஷ் (27) தேவனூர்புதூரைச் சேர்ந்த நித்தியானந்தம்(41), மாணிக்கவாசகம் (52) ஆகியோர் வனத்துறை முன் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக தங்கி இருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் தலா ரூ.20 ஆயிரம் வீதம் 5 நபர்களுக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தனர். அதன்படி 12 நபர்களுக்கு ரூ 2 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரையும் மாவடப்பு மற்றும் காட்டுப்பட்டி குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் அழைத்துச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.மேலும் மலைவாழ் குடியிருப்புகளுக்கு வனத்துறை முன் அனுமதி இல்லாமல் வெளிநபர்களை அழைத்துச் செல்லக் கூடாது என்றும்,மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உடுமலை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.