அரசுப் பணியாளர்களுக்குப் பயிற்சி ஆட்சிமொழிப் பயிலரங்கம் / கருத்தரங்கம் 12.08.2025 மற்றும் 13.08.2025 ஆகிய இரு நாட்களில் நடைபெறவுள்ளது
ஆகஸ்ட் 2025 ஆம் ஆண்டிற்கான அரசுப் பணியாளர்களுக்குப் பயிற்சி ஆட்சிமொழிப் பயிலரங்கம் / கருத்தரங்கம் 12.08.2025 மற்றும் 13.08.2025 ஆகிய இரு நாட்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தகவல்.;
அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தினை முனைப்புடன் செயற்படுத்திடவும், திட்டச் செயலாக்கத்தில் காணும் இடர்பாடுகளைக் களைந்திடவும், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்டந்தோறும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் 12.08.2025, 13.08.2025 ஆகிய நாள்களில் விருதுநகர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் தலைமை ஏற்றுத் தொடங்கி வைக்க இருக்கிறார். தமிழ் வளர்ச்சி இயக்குநர் திட்டச் செயலாக்கம் குறித்து சிறப்புரையாற்ற உள்ளார். பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கத்தில் அரசு உயர் அலுவலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் மொழி வல்லுநர்கள் பங்கேற்று, தமிழ் மொழியின் தொன்மை, ஆட்சிமொழிக்கான தகுதி, ஆட்சிமொழிச்சட்டம் / வரலாறு / செயற்பாடு, பிழையின்றி தமிழில் எழுதுதல், வரைவுகள், குறிப்புகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், மொழிப்பயிற்சி, கலைச் சொல்லாக்கம் போன்ற தலைப்புகளில் கருத்துரை வழங்க உள்ளனர்.