ஆட்டோ கவிழ்ந்து விபத்து: பெண்கள் உட்பட 13 பேர் படுகாயம்!

எட்டயபுரம் அருகே சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் மற்றும் 12 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2024-11-21 05:06 GMT
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் ஆர்.சி தெருவை சேர்ந்த சேகர் மகன் உதயகுமார் (44). ஆட்டோ டிரைவர். சொந்தமாக ஆட்டோ வைத்து, வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று இவர் எட்டயபுரம் ஆர்.சி.தெருவில் இருந்து விவசாய பணிக்காக 12 பெண் தொழிலாளர்களை ஆட்டோவில் ஏற்றி கொண்டு ராமனூத்து கிராமம் நோக்கி ெசன்று கொண்டிருந்தார். விளாத்திகுளம் ரோட்டில் பாரதி கூட்டுறவு நூற்பாலை அருகே சென்றபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடி, ரோடு ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த டிரைவர் உதயகுமார், செந்தில்குமார் மனைவி முத்துமாரி, பொன் மாரியப்பன் மனைவி சுப்புலட்சுமி, செல்லத்துரை மனைவி பத்மா, மாரிமுத்து மனைவி மாரியம்மாள், சேகர் மனைவி தாயம்மாள், பாலசுப்பிரமணியம் மனைவி முனியம்மாள், ஆறுமுகம் மனைவி சாந்தா ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், முருகன் மனைவி செண்பகவல்லி, மாடசாமி மனைவி தங்கமாரி, கந்தையா மனைவி வேலம்மாள், பரமசிவம் மனைவி நாகம்மாள், முத்துச்சாமி மனைவி மாடத்தி ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News