உழவன் எக்ஸ்பிரஸ் 13 ம் ஆண்டு தொடக்க விழா: ரயில் பயணிகள் கொண்டாட்டம்
ரயில்;
தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் 13-ஆம் ஆண்டு தொடக்கவிழா திங்கள்கிழமை தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் கேக் வெட்டியும், ரயில் ஓட்டுநர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் பாராட்டு தெரிவித்தனர். தஞ்சாவூரிலிருந்து மெயின் லைன் வழியாக மீட்டர் கேஜ் பாதையில் சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில், அகல ரயில் பாதையாக மாற்றம் செய்யும் பணி தொடங்கியதும் அந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து மெயின் லைன் அகல ரயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்ட பின்னர் சென்னைக்கு ரயில் இயக்கப்படவில்லை. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணிகள், பொதுமக்கள் தன்னார்வ அமைப்பினர் என பல தரப்பினரும் புதிய ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்.1ஆம் தேதி தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு உழவன் விரைவு ரயில் என்ற பெயரில் புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் தொடங்கப்பட்ட நாள் முதல் தினமும் முன்பதிவு பெட்டிகளில் இருக்கைகளும், படுக்கை வசதிகளும் நிரம்பி வருகிறது. பல தரப்பினரும் மிகவும் பயனுள்ளதாக இயக்கப்படும் உழவன் விரைவு ரயிலின் 13-ஆம் ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை இரவு தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் கொண்டாடப்பட்டது. அப்போது உழவன் விரைவு ரயிலின் சேவையை போற்றும் விதமாக கேக் வெட்டியும், உழவன் ரயிலின் ஓட்டுநர்களுக்கு போன்னாடை போர்த்தியும், ரயில் பயணிகளுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன. இதில் தஞ்சாவூர் ரயில் உபயோகிப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.