தஞ்சையில் பீன்ஸ் விலை உயர்வு: கிலோ ரூ.160க்கு விற்பனை

தஞ்சையில் வரத்து குறைவு காரணமாக பீன்ஸ் கிலோ ரூ.160க்கு விற்பனை ஆனது.

Update: 2024-04-26 15:42 GMT

கோப்பு படம் 

கடும் வெயில் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வரத்து குறைந்து, தஞ்சை மாவட்டத்தில் பீன்ஸ் விலை அதிகரித்து கிலோ ரூபாய் 160 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகள் உடலுக்கு தீங்கு விளைவிக்காமல், ஆரோக்கியத்தை அளிக்கக் கூடியவை. பீன்ஸில் அதிக சத்துக்கள் உள்ளது. தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பீன்ஸ் அதிக அளவில் கொண்டு வரப்படுகிறது.

அதேபோல் இங்கு இருந்து வெளியூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது கடும் கோடை நிலவி வருவதால் பீன்ஸ் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து பீன்ஸ் வரத்து குறைந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ பீன்ஸ் ரூபாய் 30-க்கு விற்பனையானது. வரத்து குறைய தொடங்கியதால்,

பீன்ஸ் விலை அதிகரித்து நேற்று கிலோ ரூ.160 க்கு விற்பனை செய்யப்பட்டது. மற்ற காய்கறிகளின் விலையும் ரூ.10 முதல் 30 வரை அதிகரித்துள்ளது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ஓசூர் மற்றும் கர்நாடக மாநில பகுதிகளில் இருந்து பீன்ஸ் அதிக அளவு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. கோடை வெயில் காரணமாக பீன்ஸ் செடியில் பூக்கும் பூக்கள் உதிர்ந்து விடுகிறது.

இதனால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. தினசரி 150 மூட்டைகளுக்கு குறையாமல் வரும் பீன்ஸ் தற்போது 50 மூட்டை அளவிலேயே கொண்டு வரப்படுகிறது. இதனால் சந்தைக்கு வந்த உடனேயே வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி சென்று விடுகின்றனர். வந்தவுடன் பீன்ஸ் விற்றுத் தீர்ந்து விடுகிறது.

இனி மழைக்காலம் தொடங்கினால் மட்டுமே பீன்ஸ் விலை குறையும் வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலை நீடித்தால் பீன்ஸ் ரூ. 200 வரை விற்பனையாகும் நிலை உள்ளது என்கின்றனர்.

Tags:    

Similar News