ஜெயங்கொண்டம் கிளை சிறையின் மதில்சுவர் இடிந்து விழுந்தது: 17 கைதிகள் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம்மேலும் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயம் பொதுமக்கள் அச்சம்: 200 ஆண்டுகள்
200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுற்றுச்சுவரை இடித்து அகற்றிவிட்டு புதிய சுற்றுச்சூழல் அமைக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும், கோரிக்கை விடுத்துள்ளனர்.;
அரியலூர், ஆக.7- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகம் அருகே ஆங்கிலேயர் காலத்தில் 1826-ம் ஆண்டு கட்டப்பட்டு சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடங்கள் உள்ளது. இந்தக் கட்டிட வளாகத்தில் நீதிமன்றம் மற்றும் கிளை சிறை ஆகியவை செயல்பட்டு வந்தது. இதனிடையே நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு தற்போது கழுவந்தோண்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது. ஆனால் கிளைச் சிறை மட்டும் இந்த இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த சிறையில் ஜெயங்கொண்டம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குற்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கிளைச்சுறையில் கைதிகளாக அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாகவும், பழமை வாய்ந்த கட்டிடங்கள் என்பதாலும் கிளைச் சிறையின் சுற்றுச்சுவர் அதாவது சுமார் 30 மீட்டர் நீளமுள்ள 24 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் நள்ளிரவு திடீரென இடிந்து உள்புறமாக சரிந்து விழுந்தது. சுற்றுச்சுவர் விழுந்த பகுதியில் கைதிகள் யாரும் அடைக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் கைதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததன் காரணமாக தற்போது கிளைச் சிறையில் உள்ள 17 கைதிகளையும் நேற்று காலை 11 மணி அளவில் பத்திரமாக மீட்டு திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயம் அதேபோன்று கிளைச் சிறையின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் அதனை சீரமைத்து புதிய சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. மேலும் உள்ள மதில்சுவர்கள் சிதலமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் உள்ளது. ஒருவேளை அந்த சுற்றுச்சூழல் விழுந்தால் கிளை சிறைக்கு பின்புறம் வசிக்கும் ஆண்டாள் தெரு பகுதி மக்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பழைய மதில் சுவர்களை முற்றிலும் இடித்து அகற்றிவிட்டு புதிதாக மதில் சுவர் கட்டி பொது மக்களையும் கைதிகளையும் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.