ரூ. 1.72 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்!
அரசு செய்திகள்
புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் மொத்தம் 18 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1.72 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டன. 4 பேருக்கு தலா ரூ. 8 ஆயிரம் மதிப்பில் மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், ஒருவருக்கு ரூ. 1500 மதிப்பில் பிரெய்லி கடிகாரம், ஒருவருக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள், 4 பேருக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலிகள், 6 பேருக்கு ரூ. 13,500 மதிப்பில் தக்க செயலியுடன் கூடிய திறன்பேசிகள், 2 பேருக்கு தலா ரூ. 4 ஆயிரம் மதிப்பில் காதொலிக் கருவிகள் என மொத்தம் 18 பேருக்கு இந்த உபகரணங்களை ஆட்சியா் மு. அருணா வழங்கினாா். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 501 கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ஆா். ரம்யாதேவி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் அ. ஷோபா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.