சேலத்தில் கணவருக்கு 2-வது திருமணம்
குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி;
சேலம் அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சீதாலட்சுமி (வயது 23). இவர் நேற்று காலை தனது ஒரு வயது பெண் குழந்தையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை குழந்தை மற்றும் தனது உடல் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்த போலீசார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் தீயணைப்பு படையினர் சீதாலட்சுமி மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை சமாதானம் செய்து டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்ல போலீசார் முயன்றனர். அதற்கு சீதாலட்சுமி மறுப்பு தெரிவித்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அவரை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து சீதாலட்சுமி கூறியதாவது:- எனக்கு ஜெயக்குமார் என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது வரதட்சணையாக 5 பவுன் நகையும், ஒரு மொபட்டும் வாங்கி கொடுத்தோம். முதலில் பெயிண்டு அடிக்கும் வேலைக்கு சென்று வந்த கணவர், அதன்பிறகு வீட்டிலேயே இருந்து வருகிறார். இதுகுறித்து கேட்டதற்கு மாமியார், மகனை பற்றி பேசக்கூடாது. நீ வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றிக்கொள்ளுமாறு கூறுகிறார். எனக்கு இதயத்தில் ஓட்டை உள்ளதால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இல்லையென்றால் 6 மாதத்தில் இறந்துபோக வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனை அறிந்த கணவர் மற்றும் மாமியார் கடந்த வாரம் என்னை அடித்து துன்புறுத்தி 5 பவுன் நகையை வாங்கிக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டனர். மேலும் எனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கணவரின் 2-வது திருமணத்தை தடுத்து நிறுத்தி, அடித்து சித்ரவதை செய்த மாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.