கோவை: இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி !

கோவையில் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் நீதிமன்ற உத்தரவின்படி ஜப்தி செய்யப்பட்டன.;

Update: 2025-04-03 06:30 GMT
  • whatsapp icon
கோவையில் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் நீதிமன்ற உத்தரவின்படி நேற்று ஜப்தி செய்யப்பட்டன. ஆலாந்துறை அருகே உள்ள வடிவேலாம்பாளையத்தைச் சேர்ந்த பகவதி (வயது 30) என்ற லாரி ஓட்டுநர் 2020 ஜனவரி 31 அன்று இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானார். இதில் அவரது கால் முறிந்தது. சிகிச்சை பலனளிக்காததால் ஒரு காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் பகவதி, கால் இழந்ததால் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் குடும்பம் வறுமையில் வாடியது. எனவே, பகவதி கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்திடம் இழப்பீடு கேட்டு வாகன விபத்துகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு 28 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து கணுவாய் செல்லும் இரண்டு புதிய அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டன.

Similar News