காதல் விவகாரத்தில் 2பேருக்கு கத்திக்குத்து!
தூத்துக்குடியில் காதல் விவகாரத்தில் காதலன் உட்பட 2பேரை கத்தியால் குத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.;
தூத்துக்குடி வள்ளிநாயகபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் மாடசாமி (21), இவர் தூத்துக்குடியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் ஒரு இளம்பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தாராம். இவர்களது காதல் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவரவே, அவர்கள் அந்த பெண்ணை கண்டித்து உள்ளனர். ஆனால் அதையும்மீறி அவர் அவர் தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்தாராம். இந்நிலையில் அந்த பெண்ணின் அண்ணன், மாடசாமிக்கு போன் செய்து அவரை சந்திக்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து மாடசாமி தனது நண்பரான கால்டுவெல் காலனியைச் சேர்ந்த ரமேஷ் மகன் சீனிவாசன் (22), என்பருடன் பால விநாயகர் கோவில் தெருவில் வந்து நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் மாடசாமியை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதை தடுத்த சீனிவாசனுக்கும் கத்தி குத்து விழுந்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த மாடசாமி, சீனிவாசன் ஆகிய 2பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் மத்திய பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டை அய்யனார் காலனியைச் சேர்ந்த சிவராமன் உட்பட 5பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.