காதல் விவகாரத்தில் காவலாளியைக் கொலை செய்த 2 இளைஞர்களுக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் திங்கள்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் விளார் சாலை பர்மா காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சந்தோஷ் (27). வேன் ஓட்டுநர். இவர் ஒரு பெண்ணைக் காதலித்து வந்ததை, அப்பெண்ணின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. பெற்றோர் கூறியதன் பேரில், சந்தோஷை பிள்ளையார்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த தனியார் நிறுவன காவலாளி ஜி. செல்வநாதன் (38) கண்டித்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில், 2021, ஜூலை 25 ஆம் தேதி சந்தோஷ் தனது நண்பரான பர்மா காலனியை சேர்ந்த ஆர். அமரேசுடன் (27) சேர்ந்து செல்வநாதனை இரு சக்கர வாகனத்தில் விளார் புறவழிச்சாலை பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை அரிவாளால் வெட்டினர். இதனால் பலத்த காயமடைந்த செல்வநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து சந்தோஷ், அமரேசை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி நாகராஜ் விசாரித்து சந்தோஷ், அமரேசுக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய காவல் ஆய்வாளர் ஜெகதீஸ்வரன், நீதிமன்றக் காவலர் பிரகாஷ்குமாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் பாராட்டினார்.