தஞ்சாவூர் மாநகரில் சிட்டிஸ் 2.0 திட்டத்துக்கு ஒப்பந்தம் மேயர் தகவல்
மாநகராட்சி;
தஞ்சாவூர் மாநகரில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக சிட்டிஸ் 2.0 திட்டத்துக்கு மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றார் மேயர் சண். ராமநாதன். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை மாலை தெரிவித்தது: திடக்கழிவு மேலாண்மை பணிக்காக சிட்டிஸ் 2.0 திட்டம் தொடர்பான தேசிய அளவிலான போட்டியில் தஞ்சாவூர் மாநகராட்சி உள்பட 84 நகரங்கள் பங்கேற்றன. இது தொடர்பான திட்ட வரைவுகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து, தஞ்சாவூர் மாநகராட்சி உட்பட 18 நகரங்களைத் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, ஜெய்பூரில் மார்ச் 3, 4, 5 ஆம் தேதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 165 கோடி மதிப்பிலான சிட்டிஸ் 2.0 திட்டம் தொடர்பாக வல்லுநர் குழுவுடனான ஒப்பந்தத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்தினர் கையொப்பமிட்டனர். திட்ட விளக்க அறிக்கை தாக்கல் செய்த பிறகு, பணிகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு கிடைக்கும். இதன் மூலம் தஞ்சாவூர் மாநகரில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்தி 2026 ஆம் ஆண்டுக்குள் தஞ்சை மாநகரம் தூய்மை மாநகரமாக உருவாக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் உள்ள குப்பைகளை உயிரியல் முனையம் மூலமாக முற்றிலும் அகற்றி, பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். தஞ்சாவூர் மாநகரில் ஏற்கெனவே இருக்கும் குப்பை சேகரிக்கும் வாகனங்களுடன் புதிதாக 200க்கும் அதிகமான பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்கள் வாங்குதல், அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகள் செயல்படுத்தப்படவுள்ளன. மேலும், மாநகராட்சியுடன் இணைக்கப்படும் ஊராட்சிகளிலும் நுண்ணுரம் செயலாக்க மையம் தொடங்கப்படும் என்றார் மேயர். அப்போது, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மண்டலக் குழுத் தலைவர்கள் டி. புண்ணியமூர்த்தி, எஸ்.சி. மேத்தா, க. கலையரசன், ரம்யா சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.