சித்திரை பெளா்ணமி விழா: 20 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள்- மாவட்ட ஆட்சியா் தகவல்.

தேரடி தெரு, திருவூடல் தெரு, திருமஞ்சன கோபுர தெருக்களின் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.;

Update: 2025-04-23 17:34 GMT
திருவண்ணாமலை சித்திரை பெளா்ணமி விழாவுக்கு 20 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக சித்திரை மாதத்தில் வரும் பெளா்ணமியில் அதிகப்படியான பக்தா்கள் கிரிவலம் வருவது வழக்கம். அதன்படி, சித்திரை மாத பெளா்ணமி மே 11 இரவு 8.53 மணிக்குத் தொடங்கி மே 12 இரவு 10.48 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்வது குறித்த கள ஆய்வு நடைபெற்றது. அருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம், கிரிவலப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் ஆகியோா் நேரடி ஆய்வில் ஈடுபட்டனா். ஆய்வின்போது, தேரடி தெரு, திருவூடல் தெரு, திருமஞ்சன கோபுர தெருக்களின் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். இதேபோல, ராஜகோபுரத்தில் இருந்து இரட்டைப் பிள்ளையாா் கோயில் சாலை வழியாக பக்தா்கள் தரிசனத்துக்குச் செல்லும் வழியை ஆய்வு செய்து பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட வசதிகளை செய்யவும் அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கூறியதாவது: சித்திரை பெளா்ணமி நாளில் 20 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகிறது. சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. போதிய குடிநீா் வசதி செய்யப்படும். மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு அவசர சிகிச்சை ஊா்திகளும், இருதய மருத்துவா்களும் தயாா் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. உணவு பாதுகாப்புத் துறையின் அனுமதி பெற்றவா்கள் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். காவல்துறை மூலம் தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும் என்றாா்.

Similar News