வருகிற சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற பாடுபடுவது
திருமருகல் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நடந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம்;
நாகை மாவட்டம் திருமருகல் திமுக வடக்கு ஒன்றியம் மற்றும் திட்டச்சேரி பேரூராட்சி சார்பில், நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், தகவல் தொழில்நுட்ப பூத் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருமருகலில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் ப.செல்வம் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ.செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். முன்னதாக, திட்டச்சேரி நகர செயலாளர் எம்.முகமது சுல்தான் வரவேற்றார். கூட்டத்தில், நாகை மாவட்ட செயலாளர் என்.கௌதமன், சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் பால.அருட்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு, பாக முகவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசினர். கூட்டத்தில், ஒன்றியத்தில் 10 ஆயிரம் புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைப்பது, அரசின் மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறி 2026 சட்ட மன்றத் தேர்தலில் கட்சி வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது, 200 தொகுதிகளில் வெற்றி பெற பாடுபடுவது என்பது உட்பட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பாரிபாலன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சந்தோஷ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட பிரதிநிதி ஜெயக்குமார் நன்றி கூறினார். அதேபோல் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், கோட்டூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.என்.கார்த்திக், மாவட்ட துணை செயலாளர் ஆரூர் மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.