திமுக அரசு பொறுப்பேற்று 2000 மாவது கோயில் கும்பாபிஷேகம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின் 2,000-வது குடமுழுக்கு விழா மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் நடைபெற்றது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டனர்.
:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், தொன்மையான திருக்கோயில்களைப் புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2,000-வது குடமுழுக்காக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பரசலூர் அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பார்வதி தேவியான தாட்சாயனியின் தந்தையும், தீவிர சிவபக்தருமான தட்சன் தான்கொண்ட செருக்கின் காரணமாக, தான் நடத்திய யாகத்தில் சிவபெருமானுக்கு வழங்க வேண்டிய அவிர்பாகத்தை வழங்காமலும், சிவனுக்கு அழைப்பு விடுக்காமலும் யாகத்தை நடத்தி சிவனை அவமரியாதை செய்ததால், சினம் கொண்ட சிவபெருமான் வீரபத்திரனை அனுப்பி தட்சனை சம்ஹாரம் செய்தார் என்பது புராணம். பல்வேறு ஐதீக பெருமைகளை கொண்ட பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா கடந்த 25ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஆறு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக தினமான இன்று ஆறாம் கால யாகசாலை பூஜைகள் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஆதீனகர்த்தர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஆறாம் காலையாக சாலை பூஜையில் பூரணாகுதி மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க விமான கும்பத்தை அடைந்தனர். தொடர்ந்து மூலஸ்தான கோபுரம் ராஜகோபுரம் விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலஸ்தான கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.