மலைவாழ் பழங்குடியின மக்கள் மற்றும் மலைவாழ் குழந்தைகள் கொண்டாடும் 21-ம் ஆண்டு விழா ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
மலைவாழ் பழங்குடியின மக்கள் மற்றும் மலைவாழ் குழந்தைகள் கொண்டாடும் 21-ம் ஆண்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், தலைமையில் நடைபெற்றது.;
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஜெயந்த் மலைவாழ் பழங்குடியின மாணவ, மாணவியர் விடுதியில், ராம்கோ குரூப் மற்றும் பி.ஏ.சி.ஆர்.சேதுராமம்மாள் அறக்கட்டளை இணைந்து நடத்தும், மலைவாழ் பழங்குடியின மக்கள் மற்றும் மலைவாழ் குழந்தைகள் கொண்டாடும் 21-ம் ஆண்டுவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், மலைவாழ்; குடும்பங்களுக்கு புதிய ஆடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: சமுதாயத்தில் மிகவும் ஒரு விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய பழங்குடியினருக்கு அவர்களுடைய கல்வி, வாழ்க்கை தரம் இரண்டையும் உயர்த்த வேண்டும் என்பதற்காக ராம்கோ நிறுவனத்தினுடைய சேதுராமம்மாள் அறக்கட்டளையின் சார்பில் நிறைய பணிகளை செய்து கொண்டு வருகிறது. நமது விருதுநகர் மாவட்டத்தில், குறிப்பாக இராஜபாளையம், வத்திராயிருப்பு வட்டங்களில் நான்கு இடங்களில் பழங்குடியினர் மக்கள் வசித்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பாக இருக்கக்கூடிய புள்ளி விவரங்களை எடுத்து பார்த்தால், அவர்களுடைய கல்வித்தரம் எவ்வாறு இருந்தது, அவர்கள் எந்த அளவிற்கு பள்ளிக்கல்வியையும், உயர்கல்வியையும் பெற்றிருந்தார்கள் என்று பார்த்தால் அது மிக குறைவான அளவில் தான் இருந்தது. இன்று அனைத்து மாணவ மாணவிகளும் பள்ளி படிப்பிற்கு வருகிறார்கள். பள்ளி படிப்பு முடித்து உயர்கல்விக்கு கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. மேலும், இந்த விடுதியில் இருந்து படித்து செவிலியர் பட்டம் பெற்று இன்று செவிலியராக பணிபுரியக் கூடிய ஒரு பெண்ணும், பொறியியல் படிக்கக்கூடிய மாணவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். மேலும், மலைவாழ் பழங்குடியின மாணவர்களுக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. அவர்களுக்கு அதனை பற்றி எடுத்து சொல்ல வேண்டும். குறிப்பாக மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விக்கும், ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட இந்தியாவின் தலைசிறந்த தொழில் நிறுவனங்களிலும் பயில்வதற்கு பழங்குடியினர் பிரிவிலிருந்து நமது தமிழ்நாட்டில் இருந்து செல்லக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்வதற்கு மட்டுமல்லாமல், அரசு வேலைவாய்ப்புகளை பெறுவதற்கும் இட ஒதுக்கீடு இருக்கிறது. அதனை எல்லாம் மாணவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். நாம் செய்கின்ற உதவிகளில் மிகவும் முக்கியமான உதவி என்பது அவர்களுக்கு இருக்கக்கூடிய வாய்ப்புகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான். அதனை ஜெயந்த் மலைவாழ் பழங்குடியின மாணவ, மாணவியர் விடுதி சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். மொழித்திறனாக இருந்தாலும், மதிப்பெண்களாக இருந்தாலும், விடுதியில் அவர்கள் கற்றுக்கொள்ளக்கூடிய புதிய திறன்களாக இருந்தாலும், அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்கி அவர்களை ஊக்குவிக்கின்ற பொழுது அவர்கள் சிறந்த மனித வளமாக மாறுகிறார்கள். எனவே காலம் காலமாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மலைகளில் இருந்து நிறைய வாய்ப்புகளை பெறாமல் விட்டவர்கள், மறுக்கப்பட்டவர்கள் இது போன்ற வாய்ப்புகளை பெற்று புதிய உயிரோட்டத்திற்கு வருகின்ற பொழுது இன்னும் நாம் அவர்களை நன்கு ஊக்கவிக்க வேண்டும். மேலும், இப்பகுதி மலைவாழ் மக்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.