மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கத்தின் 21ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாட்டில் வால்மார்ட் வராமல் தடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா - விக்கிரம ராஜா பேட்டி டிரம்ப் சிறுபிள்ளை போல் விளையாடு கொண்டு இருக்கிறார். இந்தியாவிற்கு 50% வரி விதிப்பு போட்டதற்கு வணிகர் சங்கத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் - விக்கிரமராஜா பேட்டி;

Update: 2025-08-11 05:03 GMT
திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கத்தின் 21ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தனியார் ஹோட்டலில் தொடங்கியது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, "தமிழ்நாடு வணிக சங்கத்தின் பேரவையின் திண்டுக்கல் வடக்கு மாவட்டத்தின் சார்பாக பொதுக்குழு தற்போது தொடங்கியுள்ளது. தமிழகம் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் சாமானிய வணிகர்களை அப்புறப்படுத்தி கொண்டு இருக்கின்றார். ஆன்லைன் வர்த்தகம் கார்ப்பரேட் கம்பெனிகளின் அத்துமீறல் போன்றவற்றிலிருந்து சிறிய வியாபாரிகளை காப்பதற்காக தான் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பெரும் முயற்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் வரும் 30ஆம் தேதி திருச்சியில் ஒரு லட்சம் சதுர அடியில் அமையவுள்ள டி-மார்ட் கட்டடங்கள் கட்டிக் கொண்டு இருக்கும் வளாகத்தில் முற்றுகை போராட்டம் பல்லாயிரக்கணக்கான வியாபாரிகளை திரட்டிக்கொண்டு நடைபெற உள்ளது. இந்தப் போராட்டம் தொடக்கம் முடிவு அல்ல. மத்திய மாநில அரசுகள் சிறு வணிகர்களை காப்பாற்ற சட்டம் இயற்ற வேண்டும். இந்த நிலைப்பாட்டை அரசுகள் எடுக்கவில்லை என்றால் சிறு வணிகர்கள் ஐந்தாண்டுகளில் காணாமல் போய்விடுவார்கள். மேலும் வணிகர்களுக்கு கடை வாடகைக்கு விடுபவர்களின் நிலையும் வாழ்வாதாரமும், பல லட்சம் தொழிலாளிகள் வேலைவாய்ப்பு இன்று தவிக்கும் சூழ்நிலை ஏற்படும். சிகரெட், பிடி வியாபாரிகளை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அழைத்து செல்வது தொடர்கதையாகி கொண்டிருக்கிறது. மேலும், வழக்குப்பதிவு, கடைக்கு சீல் வைப்பு போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. சென்னை மாநகர ஆணையர் தற்போது இதனை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பள்ளி, கல்லூரி அருகே 100 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் யாரும் போதை வஸ்துக்கள் விற்பனை செய்யக்கூடாது. அது மிகப்பெரிய பாவம். இதில் தமிழ்நாடு வர்த்தக சங்கமும் உறுதியாக உள்ளது. திண்டுக்கல்லில் குப்பை வரி, தொழில் வரி, கட்டட வரி, லைசன்ஸ் வரி போன்றவை போடப்பட்டு உடனடியாக கடை சீல் வைக்கப்படும் என மிரட்டப்படுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதிகாரிகள் வியாபாரிகளை கசக்கி பிழிந்து விடாதீர்கள்.
தமிழக அரசே டிமார்ட் போன்ற நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கொடுத்து வருகிறது என்ற கேள்விக்கு
தமிழ்நாடு முதல்வரிடம் நேரடியாகவே கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. டிமார்ட் வருவது உலகமயமாக்கல் கொள்கை எனக் கூறுகிறார்கள் அதிகாரிகள். வால்மார்ட் வரும்பொழுது வணிகர் சங்கம் போராட்டம் நடத்தினார்கள் அப்போது அதனை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தடுத்து நிறுத்தினார். கேரளாவில் டி மார்ட் திறக்க முடியாது. தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த மாலுக்கும் கேரளாவில் அனுமதி கிடையாது. கேரள மாநிலம் அவர்களது வியாபாரிகளை பாதுகாக்கின்றனர். அமெரிக்கா நியூயார்க் ஆகிய இடங்களிலும் வால்மார்ட்க்கு அனுமதி கிடையாது. தமிழகத்தில் 35 லட்சம் வியாபாரிகள் குடும்பம் உள்ளது. ஒரு கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் வரவேண்டும் என்றால் தமிழக அரசு எங்களை பாதுகாக்க வேண்டும். தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் நல்லது நடக்கும் என நினைக்கிறேன். திருச்சி போராட்டத்திற்குப் பிறகு கண்டிப்பாக ஒரு பெரிய மாற்றம் உண்டாகும்.
ஜெயலலிதா அன்று வால்மார்ட் வராமல் தடுத்தார் இன்றைய அரசு அதனை செய்ய தவறி விட்டதா? என்ற கேள்விக்கு
சிறு குறு வியாபாரிகள் அன்று தவறு செய்து விட்டோம். அகில இந்திய அளவில் வர்த்தக அமைப்புகள் ஒன்றிணைந்து வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே வரக்கூடாது என முடிவு எடுத்தோம். ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் மும்பையை சேர்ந்தவை அதற்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தது. மொத்த வியாபாரம் மட்டுமே செய்ய வேண்டும் என்பதுதான் சட்டம். தற்போது இதில் சிறு வியாபாரம் செய்யலாம் என சட்டம் இயற்றப்பட்டதால் பல்வேறு கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் நாங்கள் தடுமாறி கொண்டு இருக்கிறோம் எதிர்ப்பதை தவிர வேறு வழி இல்லை. அரசு தடை செய்யுமா என்பது வரும் காலங்களில் தான் தெரியும். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு என்பது பாதிப்பு தான் . தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம். டிரம்ப் சின்ன பிள்ளை விளையாடுவது போல் விளையாடிக் கொண்டிருக்கிறார். உலகம் முழுவதும் தற்போது வர்த்தக போர் நடந்து கொண்டு இருக்கிறது. அமெரிக்கா அதனை கையில் எடுத்துக்கொண்டு இந்தியாவை மிரட்டிக் கொண்டிருக்கிறது. இதற்காக தமிழ்நாடு வர்த்தக சங்க பேரமைப்பு உள்நாட்டு பொருள்களை வாங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறது. மக்கள் அனைவரும் ஆன்லைனில் பொருள் வாங்காதீர்கள் என்பதை எங்களின் கோஷமாக உள்ளது. வர்த்தகர் சங்கத்தினருக்கு ஆன்லைன் என்பது மொத்தமாக மிகப்பெரிய பாதிப்பு. ஆன்லைன் வர்த்தகம் வியாபாரத்தை ஸ்ட்ரா போட்டு உறிந்து கொண்டிருக்கிறார்கள். ஆன்லைன் டி-மார்ட் மூலமாக இதனை செய்கிறார்கள். இதனால் வர்த்தகர்கள் தொழிலாளர்கள் கட்டட உரிமையாளர்கள் பாதிப்பு அடைகின்றனர் இதனை முதல்வரிடம் எடுத்து சென்றுள்ளோம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு மூன்று டி-மார்ட் அமைய உள்ளது குறித்த கேள்விக்கு
தேவைப்படுமே ஆனால் வாழ்வாதாரத்தை காப்பதற்கு, தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்த கடைகளையும் அடைத்து விட்டு வேறு வேலைக்கு செல்லவும் தயாராக இருக்கிறோம். டி மார்ட் போன்ற தனி மனிதர்களை வைத்து அவர்கள் வியாபாரம் செய்து கொள்ளலாம். தவறு இல்லை. 100% வியாபாரிகளில் 80% வியாபாரிகள் வட்டிக்கு பணம் பெற்று கடை நடத்தி வருகின்றனர். வியாபாரிகளை பாதுகாக்க வேண்டியது அரசு அதனை செய்ய தவறினால் ஒட்டு மொத்த வாழ்வாதாரமும் சீரழிந்து விடும்" என தெரிவித்தார்.

Similar News