சாலை விதிமுறைகளை கடைபிடிக்காத 219 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு

கலெக்டர் பிருந்தாதேவி தகவல்;

Update: 2025-03-03 08:59 GMT
சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து போலீசார், அரசு அலுவலர்களுடனான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சாலை விபத்துகளை முற்றிலும் குறைத்து விபத்தில்லாத பயணத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, மனித உயிர்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உயிர் இழப்பை தவிர்க்கும் நோக்கில் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்தும், கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்தும், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் வாகனங்களை ஓட்ட வேண்டும். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து எதிர் காலத்தில் விபத்து ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்து வரும் காலங்களில் சாலை விபத்துகள் ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் கடந்த ஜனவரி மாதத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு செல்வது உள்ளிட்ட விதிமுறைகள் கடைபிடிக்காத 219 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. 137 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலைகளை கண்டறிந்து சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாகனங்கள் ஓட்டும்போது கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம், சாலை பாதுகாப்பு கருத்தரங்குகள் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News